Sunday, June 24, 2007

உறவுகள் விற்பனைக்கு அல்ல !


உறவுகள் விற்பனைக்கு அல்ல !

உறவு -
உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்
உன்னதமான மொழி இது.
பிறப்பு முதலாக
இறப்பு முடிவாக
பல பரிமாணம் கொண்ட
பன்முகக் கண்ணாடி இது.

தாயுடன் சேய்கொண்ட உறவும்
உள்ளத்துடன் நீ கொண்ட உறவும்
உயிருடன் உடல் கொண்ட உறவும்
இயற்கையின் படைப்பினில்
இமயமாய் நிற்பவை.

ஆனால்,
இன்று....
இயற்கையுடனான உறவு இயந்திரமானது.
இயந்திரத்துடன் உறவு இயல்பானது.
மனிதனுடனான உறவு மறந்து போனது.
மனிதம் இங்கே மரத்துப் போனது.
உலகம் சுருங்கலாம் - ஆனால்
உறவுகள் ?

உழைப்பின் உதவியை நாடினால்
வாழ்வின் வாசல் வசப்படும்.
உறவுப் பூவை முகர்ந்தால்
வாழ்வின் வாசம் புலப்படும்.

மானிடா,
உறவுகள் வாழ்வின் வேர்கள்.
உன்னுடன் நீ கொண்ட உறவு முதல்
மண்ணுடன் நீ கொள்ளும் உறவு வரை
உறவை வளர்த்திடு; உன்னதம் உணர்ந்திடு.

உறவுகள் விற்பனைக்கு அல்ல...
வாழ்வதற்கே.
அன்பை ஆள்வதற்கே.

உறவால்,
வானம் வசப்படும்.
வாழ்க்கை வசந்தமாகும்.
வானவில் வளைந்து வரும்.
வாசல் தேடி வரும்.